×

ஆன்லைன் சூதாட்டத்தில் ஏற்பட்ட கடனால் விபரீதம்; மகனை கொன்று தூக்கில் தொங்கவிட்டு தற்கொலைக்கு முயன்ற தந்தை கைது: தாம்பரம் அருகே பரபரப்பு

சென்னை : தாம்பரம் அருகே ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்பட்ட கடன் தொல்லையால், மகனை கொன்று தூக்கில் தொங்கவிட்டு தற்கொலைக்கு முயன்ற தந்தை கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர் பெண்டியாலா கிருஷ்ண சைதன்யா (33). இவருக்கு வைதேகி (33) என்ற மனைவி, பத்ரி (8), கௌஷிக் (4) என இரண்டு மகன்கள் உள்ளனர். இவர் குடும்பத்துடன் தாம்பரம் அடுத்து மாடம்பாக்கம், பார்வதி நகர் பிரதான சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி கிழக்கு தாம்பரம் பகுதியில் உள்ள தாம்பரம் விமானப்படை பயிற்சி மையத்தில் கடந்த 8 ஆண்டுகளாக சமையல்காரராக வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், சைதன்யா ஆன்லைன் சூதாட்டம் ஆடுவதற்கு பலரிடம் பல லட்சம் வரை கடன் பெற்றதாக கூறப்படுகிறது. கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டுள்ளனர். இதனால் கடன் தொல்லையில் அவதிப்பட்டு வந்த சைதன்யா கடும் மன உளைச்சலுக்கு உள்ளானார். பின்னர் மருத்துவ விடுப்பு எடுத்து தனது சொந்த ஊருக்கு குடும்பத்துடன் சென்று கடந்த ஓராண்டாக வசித்து வந்ததாகவும், சிறிய அளவில் கடனை அடைத்த பின்னர் மீண்டும் கடந்த மாதம் 20ம் தேதி குடும்பத்துடன் மாடம்பாக்கம் பகுதிக்கு வந்துள்ளார்.

இந்நிலையில், மீண்டும் கடன் கொடுத்தவர்கள் திரும்ப கேட்டு தொல்லை செய்துள்ளனர். இதனால் மனம் உடைந்த சைதன்யா நேற்று அதிகாலை குடும்பத்துடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது மூத்த மகன் பத்ரியை மட்டும் வீட்டில் உள்ள மற்றொரு படுக்கை அறைக்கு அழைத்து சென்று அவனை புடவையால் கழுத்தை இறுக்கி கொலை செய்தார். பின்னர், அதே புடவையில் அவனை தூக்கில் தொங்க வைத்துவிட்டு, வாட்ஸ்- அப் குழுவில் தன் மகனை கொலை செய்து விட்டதாகவும், இந்த தகவல் வீட்டில் மற்றொரு அறையில் தூங்கிக் கொண்டிருக்கும் தனது மனைவி மற்றும் மற்றொரு மகனுக்கு தெரியாது. தானும் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் பதிவு செய்துள்ளார். உடனடியாக அவரது நண்பர்கள் அங்கு சென்று பார்த்தபோது மகன் பத்ரி தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்திருந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தவர்கள் சேலையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவனின் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், போலீசார் சைதன்யாவின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டனர். அப்போது சென்னை மெரினா கடற்கரையில் ரோந்து பணியில் இருந்த போலீசார் அந்த செல்போனில் பேசி, அதிகாலையில் மெரினா கடற்கரைக்கு வந்து கடலில் விழுந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவரை மீட்டு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர், சேலையூர் போலீசாருக்கு இதுகுறித்து ரோந்து போலீசார் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், மெரினா கடற்கரைக்கு விரைந்த போலீசார், அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில், ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டத்தில் பங்கேற்று பல லட்சம் ரூபாய் இழந்ததாகவும், சூதாட்டத்திற்கு பணம் தேவை என்பதால் மாமியார் வீட்டு சொத்து, தனது பெற்றோரின் சொத்து என அனைத்தையும் அழித்து விட்டதாகவும், எனது வலி எனக்கு தான் தெரியும் என்று மட்டுமே தெரிவித்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில், விமானப்படை பயிற்சி மையத்தில் சமையல்காரராக வேலை செய்வதன் மூலம் 42 ஆயிரம் சம்பளம் கிடைப்பதாகவும், சூதாட்டத்திற்கு பயன்படுத்த பலரிடம் லட்சக்கணக்கில் கடன் பெற்றதால் கடன் தொகை மட்டும் மாதம் ரூ.50 ஆயிரம் செலுத்தும் நிலை இருந்ததால் தற்கொலை செய்ய திட்டமிட்டதாகவும், மூத்த மகன் பத்ரி மிகவும் பிடித்தவன் என்பதால் அவனையும் தன்னுடன் அழைத்துச் செல்ல திட்டமிட்டதும், நான் தற்கொலை செய்து கொண்டால் தனது வேலை மனைவிக்கு கிடைக்கும் எனவும் அவ்வாறு கிடைக்கும் பட்சத்தில் மாதம் ரூ.42 ஆயிரத்தை வைத்து மனைவி இளைய மகனை பார்த்துக் கொள்வார் எனவும் திட்டமிட்டு மகனை கொலை செய்து பின்னர் தானும் தற்கொலைக்கு முயற்சித்தது தெரிய வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தசம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சைதன்யா எழுதிய கடிதம் சிக்கியது: மகனை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை முயற்சி செய்வதற்கு முன்னர் சைதன்யா எழுதிய கடிதம் ஒன்று போலீசாரிடம் சிக்கி உள்ளது. அதில், ‘‘எனது மகன் பத்ரியை எனக்கு மிகவும் பிடிக்கும். பத்ரிக்கும் என்னை மிகவும் பிடிக்கும். நான் இல்லையென்றால் அவனும் அந்த துக்கத்தில் ஏங்கி ஏங்கி இறந்து விடுவான். எனவே அவனை என்னுடன் அழைத்து செல்கிறேன். மனைவி வைதேகி 2வது திருமணம் செய்து கொள்ள வேண்டும். இரண்டு பிள்ளைகளை தனியாக பார்த்துக் கொள்ள முடியாது என்பதால் மகன் பத்ரியை என்னுடன் அழைத்துச் செல்கிறேன் என கடிதம் எழுதி இருந்தார்.

The post ஆன்லைன் சூதாட்டத்தில் ஏற்பட்ட கடனால் விபரீதம்; மகனை கொன்று தூக்கில் தொங்கவிட்டு தற்கொலைக்கு முயன்ற தந்தை கைது: தாம்பரம் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Tambaram ,Chennai ,Pendiala Krishna Chaitanya ,Andhra ,
× RELATED தாம்பரம் மாநகராட்சி பகுதி...